தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும்

பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை, ஆக.21

அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து தனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையில் அரசு மற்றும் தனியார் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தண்ணீர் லாரிகளை அதிகாரிகள் சிறைபிடிப்பதும், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லாரிகள் உள்பட காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன. தனியார் தண்ணீர் லாரிகள் நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்து விடுகின்றனர். தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகளை சிறைபிடிப்பதை கண்டித்தும், லாரி உரிமையாளர்கள் மீது பொய்யாக திருட்டு வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்தார். அதன் படி இன்று வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது. இதனையடுத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், தனியார் தண்ணீர் லாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் குடிநீர் வாரிய இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of