ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி, ஆக.13

ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை எல்லாம் உடனடியாக நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு பல பகுதிகளில் போலீசாரின் 144-விதியின்கீழான தடை உத்தரவு, கைபேசி இணைப்பு, இன்டர்நெட், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடைகளை எல்லாம் நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெஹ்சீன் பூனாவல்லா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்டோகி ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் மிகவும் உணர்ச்சிமயமானது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு சற்று அவகாசம் அளித்தாக வேண்டும். இந்த தடையை நீக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதுவரை உயிர்கள் பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டதுடன் 2 வார அவகாசம் அளித்து இவ்வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of